டெல்லி,
கேரளாவையும் வட இந்தியாவையும் ராகுல் காந்தி ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாக்காளர்களை அனைவரையும் மதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரை பணிகளை மேற்கொள்ள மூன்று நாள் பயணமாகக் கேரளா மாநிலத்திற்குச் சென்றுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசுகையில், “முதல் 15 ஆண்டுகள் வட இந்தியாவில் நான் எம்.பி.யாக இருந்தேன். அங்கு நான் வேறு வகையான அரசியல் செய்ய வேண்டியிருந்தது.
அப்படியிருக்கும்போது கேரளாவுக்கு வருவது புத்துணர்ச்சியாக இருந்தது, இங்குள்ள மக்கள் பிரச்சினைகளை ஆழமாகப் பார்க்கின்றனர். பொதுமக்கள் காட்டும் பாசம் மட்டுமல்ல, செய்யும் அரசியலுக்கும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்றார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்து விரைவில் சர்ச்சையாக வெடித்தது.
ராகுல் காந்தி பிரித்து ஆளும் சூழ்ச்சியைப் பயன்படுத்த முயல்வதாகவும் வட இந்தியர்களை அவமதித்துவிட்டதாகவும் பல்வேறு பாஜக தலைவர்களும் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் இது குறித்துக் கூறுகையில், “அவரது பேச்சு பற்றி கருத்து கூற எனக்கு எவ்வித உரிமையும் இல்லை.
எந்தச் சூழ்நிலையில் இந்த மாதிரியான ஒரு கருத்தைச் சொன்னேன் என்று அவர் விளக்க முடியும். ஆனால் ஒன்று, நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களின் அறிவை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. யாருக்கு வாக்களிக்க வேண்டும், எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுக்குத் தெரியும். காங்கிரஸ் இந்தியாவைப் பிரித்து ஆள முயல்வதாக பாஜக கூறுவது கேலிக்கூத்தானது. இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மக்களைப் பிளவுபடுத்திக் கொண்டு தான் இருக்கிறது” என்று அவர் கூறினார்.