மக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார். தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று, அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு இன்னும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு மத்தியில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக – அதிமுக கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், பாஜக போன்றவை நடிகர்கள் உள்ளிட்ட சிலரை இழுக்கும் படலத்தை தொடங்கி இருக்கிறது. சில நடிகர், நடிகைகள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகர் விஜய் தந்தையுடன் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், பாரதிய ஜனதா கட்சியில் நான் சேரப்போவதாக வந்த தகவல் உண்மையில்லை. பாஜகவில் இணையப்போகிறேன் என்ற கேள்விக்கு இடமே இல்லை என்று விளக்கம் அளித்தார்.
மேலும் எனக்கென்று தனி அமைப்பு உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் அழைக்கும் போது விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவ்வாறு மக்கள் அழைக்கும் போது அரசியலுக்கு வருவது சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.
தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவதில் நான் தனி கவனம் செலுத்தி வருகிறேன். பாஜகவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் எஸ்.எஸ். சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
—