இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கைகோள்கள் உட்பட 10 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் இஸ்ரோ, பூமியை கண்காணிக்கவும், வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டி அறிந்து கொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக, அவ்வப்போது செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அத்துடன், வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ ஏவுகிறது.
எனினும், கொரோனா பாதிப்பு காரணமாக உலகமே முடங்கிப்போன நிலையில், இஸ்ரோவின் ஆராய்ச்சிப்பணிகளிலும் அதன் தாக்கம் இருந்தது. இச்சூழலில், இந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து முதல் ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ இன்று ஏவியது.
பிஎஸ்எல்வி சி -49 ராக்கெட் மூலம் இஓஎஸ் – 01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளை இன்று பிற்பகல் 3.12 மணிக்கு விண்ணில் ஏவியது. இந்த செயற்கைகோள் புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, வன கண்காணிப்பு ஆகியவற்றை துல்லியமாக மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவுக்கு சொந்தமான 4 செயற்கைகோள்களும், லிதுவேனியாவின் ஒரு செயற்கைகோளும், லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4 செயற்கைகோள்களும், வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டன.
இன்று பிற்பகல் 3.02 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது; எனினும் மோசமான வானிலையால், பத்து நிமிடம் தாமதமானது. இந்த நிலையில், மாலையில் இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், அனைத்து செயற்கைகோள்களும் திட்டமிட்டபடி தனித்தனியாக பிரிந்து, அதனதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு, இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விஞ்ஞானிகள் பல தடைகளை முறியடித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உள்ளதாக, பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.