ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், காவல்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து காலநீட்டிப்பு வழங்கப்பட்டதாக கூறினார். ஆனால் திமுக ஆட்சி அமைந்த பிறகு உடனடியாக இடைக்கால அறிக்கை பெறப்பட்டதாகவும், பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் முழு அறிக்கையை வழங்கவும் உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் முதல்வர் கூறினார். விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையை பெற்றபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும், ஆறுமுகசாமி ஆணையம், தனது விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.