திருவாரூரில் ரேஷன் கடை உணவுப் பொருட்களை சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பொதுமக்களின் நலனுக்காக குடும்ப அட்டை வழங்குதல் , உணவு பொருட்கள் வினியோகம், சிறப்பு பொது விநியோகத் திட்டம், ரேஷன் கடைகளை கணினி மயமாக்குதல், உள்ளிட்ட பல சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அத்துடன் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி கிடைக்கவும், பொருட்களின் தரத்தை உறுதி செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நொச்சி ஊரில் ரேஷன் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரிசி, சமையல் எண்ணெய் வினியோகிக்கப் பட்டுள்ளது.
ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சமையல் எண்ணைய்யில் உணவு சமைத்து சாப்பிட்ட பெண் உள்ளிட்ட 3 பேருக்கு வாந்தி , வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது .இதனால் பாதிக்கப்பட்ட மூவரும் சித்தாமல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதியான எண்ணெய் வழங்கியதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.