‘ஆயிரம் ஜன்னல் வீடு, இது அன்பு வாழும் கூடு” – கூட்டுக்குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் ஓரிடத்தில் சந்தித்துக்கொண்ட உறவுகளின் சங்கமம். கொள்ளுத் தாத்தா முதல் எள்ளுப்பேரன் வரை கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர்மயமாதலின் விளைவாக கூட்டுக்குடும்பங்கள் என்ற அழகிய அமைப்பு குறைந்து வருகிறது. ஏழு தலைமுறைக்கு முன்னர் ஒரு குடும்பத்தில் பிறந்த பலர் கிளைகளாக மாறி பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்த பிறகு குடும்பங்களுக்கு ஒருவர் மட்டுமே வாரிசு என்று மாறிப் போன உலகத்தில், ஒ 5 தலைமுறையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மயிலாடுதுறையில் சந்தித்து கொண்ட நிகழ்வு கூட்டுக்கூடும்பத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் 1850-ஆம் ஆண்டு முதல்தலைமுறையான விசுவலிங்கத்தின் மகன் ராமசாமி என்பவர் கன்னியாகுடியை சேர்ந்த மீனாட்சி என்பவரை திருமணம் முடித்து மளிகைகடை நடத்தி மிராசுதாராக உயர்ந்தவர். 2-ஆம் தலைமுறையாக வாழ்ந்து மறைந்த ராமசாமி-மீனாட்சி தம்பதியினருக்கு 5 மகன்கள் 1 மகளுடன் துவங்கிய இவரது குடும்பம் தற்போது 7-வது தலைமுறையைக் கண்டுள்ளது.
2-வது தலைமுறையில் இருந்து கூட்டு குடும்பமாக உள்ள இவர்களின் குடும்பத்தினர் சுமார் 500 பேர் பணி நிமித்தம் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். கூட்டுக் குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அவர்கள் அனைவரும் ஒன்றுகூட நினைத்து கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் உறவினர்களை சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைந்தனர்.
இந்நிலையில் இந்த 5 தலைமுறைகள் சங்கமம் நிகழ்வு மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமணக்கூடத்தில் நடைபெற்றது. தாத்தாக்கள், பாட்டிகள், மகன்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள், எள்ளுபேரன்கள் வரை 5 தலைமுறைகளை சேர்ந்த 27 குடும்பத்தினரை சேர்ந்த 485 பேர் ஒரே இடத்தில் சங்கமித்து தங்கள் உறவுகளுடன் கலந்துறையாடி அளவளாவினர்.
தற்போது வாழ்ந்து வரும் மூத்த தலைமுறைகளை மேடையில் ஏற்றி ஃபேமிலி ட்ரீ புகைப்படத்தை வெளியிட்டனர். நிகழ்ச்சியில்; சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பி எடுத்துகொண்டும் கொஞ்சி பேசியும், மூத்த தலைமுறையினரிடம் ஆசி பெற்றும் அளவளாவிய காட்சிகள் பரவசப்படுத்தியது.
மேலும் தங்கள் தலைமுறைவாசிகள் வாழ்ந்த வீடு அவர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்திய பொருள்கள், பாக்குவெட்டி, கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் திரையிடப்பட்டு கூட்டுக்குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.