சூரப்பாவின் செயல்பாடு: அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் செயல் ஒழுங்கீனமாக உள்ளது, அவரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளதாக, அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே. சூரப்பா பொறுப்பேற்றது முதலே, சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. பாடத்திட்டத்தில் தத்துவவியல் படிப்பு என்ற பெயரில் பகவத் கீதை, சமஸ்கிருதம் போன்றவற்றவற்றை சேர்க்க முயன்றார். கடும் எதிர்ப்பு கிளம்பியதால், விருப்பப்பாடம் என்று கூறி மழுப்பினார். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் விவகாரமும், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இச்சூழலில்தான், தமிழக அரசுக்கு தெரியாமல் மத்திய அரசுக்கு துணை வேந்தர் எம்.கே. சூரப்பா கடிதம் எழுதிய விவகாரம், பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தேர்வு கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை மாநில அரசின் பங்காக வைத்துக் கொள்ளலாம் என சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, மாநில அரசிடம் அனுமதி கேட்டு, மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்த பிறகே, இந்த விவகாரம் வெளியே தெரியத் தொடங்கியது. மாநில அரசின் அனுமதியின்றி, துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக எப்படி கடிதம் எழுதலாம் என்று, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவே, ”தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதவில்லை” என்று வழக்கம் போல், சூரப்பா விளக்கம் தந்தார்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின்  நடவடிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளதாக, அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, விழுப்புரத்தில் அவர் இன்று கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற வேண்டி பல்கலைக்கழக துணைவேந்தர், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து ஆராயப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன், எந்த நிலையிலும் எந்த சூழலிலும் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் விளைவிக்கும் எந்தச் செயலையும் அரசு ஏற்றுக்கொள்ளாது எனக்கூறியுள்ளோம். சிறப்பு அந்தஸ்து பெற வேண்டியதில் உள்ள ஷரத்துகள்,  தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் கொண்டு வந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளன. இதற்கு விளக்கம் அளிக்கக் கோரியபோது விளக்கம் தர மறுத்துவிட்டனர்.

எனவே, இது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று எண்ணி கர்நாடகாவில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, மத்திய அரசை நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார். நாங்களே நிதியாதாரம் திரட்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த வகையில் நிதியாதாரம் பெருக்கிக் கொள்வார் எனத் தெரியவில்லை.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் இந்த செயல் ஒழுங்கீனமானது. இதுபற்றி அவரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக தமிழக அமைச்சர் கடுமையாக கருத்துகளை தெரிவித்திருப்பது, கல்வித்துறை வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Translate »
error: Content is protected !!