நடிகை தமன்னா, விராட் கோலிக்கு நோட்டீஸ்… ஐகோர்ட்டின் அதிரடிக்கு காரணம் இதுதான்!

பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் விராத் கோலி உள்ளிட்டவர்களுக்கு, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழப்பதும், அதனால் சிலர் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டை தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போட்து நீதிபதிகள், ஜூலை மாதமே ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

சூதாட்டத்தில் பணத்தை இழந்து, ஒவ்வொரு நாளும் பல உயிர்கள் பறி போகும் நிலையில், இந்த விஷயத்தில் விரைவாக நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று கூறிய நீதிபதிகள், ஆன்லைன் விளம்பரத்தில் பங்கேற்கும் பிரபலங்கள் பொது நலனை கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவதாகவும் சாடினர்.

இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் ஆன்லைன் விளம்பரங்களில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோலி,கங்குலி நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Translate »
error: Content is protected !!