வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான சட்டத்தில் புதிய விதிமுறைகளை சேர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் வெளிநாட்டு நிதி உதவியை பெற முடியாது எனவும், புதிய அறிவிப்பில் அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதி உதவிகளை பெற அனுமதி கோரும் அமைப்புகள், குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் செயல்பட்டிருக்க இருக்க வேண்டும்; கடந்த மூன்றாண்டுகளில் குறைந்தபட்சம் 15 லட்ச ரூபாயை நலத் திட்டங்களுக்காக செலவு செய்திருக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டில் இருந்து நிதி வழங்கக் கூடியவர்கள் என்ன காரணத்திற்காக நிதியை வழங்குகிறார்கள் என்பதற்கான கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், ஊடகங்களை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளிநாட்டு நிதி உதவிகளை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.