தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது எனத் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு நாள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கூறுகையில், ”தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சித் தலைவர்கள், எல்லைமீட்பு போராளிகள், இன உணர்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் போன்றோரை அழைத்துக் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது. மாண்புமிகு முதல்வருக்கு எமது வேண்டுகோளாக முன்வைக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.