பெண் காவலர் காப்பாற்றிய நபர் பலி 

சென்னையில் பெண் காவல் ஆய்வாளர் தோள் மீது சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் வடகிழக்கு பருவமழையினால் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பேரிடர் சூழல் என்பதால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உட்பட நிவாரணங்களை வழங்கியும் சென்னை காவல்துறையினர் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் டி.பி சத்திரம் காவல் ஆய்வாளரான ராஜேஸ்வரி செனாய் நகர் கல்லறை சாலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தபோது, அங்கு சுயநினைவின்றி கிடந்த வாலிபர் ஒருவரை மீட்டு தோள் மீது சுமந்து கொண்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சுயநினைவின்றி கிடந்த வாலிபர் செனாய் நகரைச் சேர்ந்த உதயா(25) என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த மனித நேயமிக்க செயலை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதயா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக டி.பி சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபர் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!