தருமபுரி அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயில் அதிகாலை 3.30 மணி அளவில் தருமபுரி ரயில்நிலையம் வந்தடைய வேண்டும். ஆனால், சேலத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வனப்பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது தண்டவாளம் அருகிலிருந்த கற்களில் உரசியதில் இன்ஜின் மற்றும் அதற்கடுத்துள்ள 3 பெட்டிகளும் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ரயிலிலிருந்த பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.