தேசிய தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க கெஜ்ரிவால் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று டெல்லி எம்.பி கவுதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், டெல்லி அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லியில் முழு அளவிலான ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க கெஜ்ரிவால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என டெல்லி எம்பி கவுதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளாக டெல்லியில் காற்றின் மாசை குறைக்க கெஜ்ரிவால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காற்று மாசை குறைக்க ஊரடங்கு தீர்வாக இருந்தால், அதை ஏன் முன்கூட்டியே செய்யவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் செய்ய வேண்டுமா?
டெல்லி அரசு பொதுப் போக்குவரத்திலோ, உள்கட்டமைப்பிலோ முதலீடு செய்யவில்லை. அப்படியானால், பொதுமக்கள் தங்கள் கார்களை விட்டுவிட்டு பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் அரசு எப்படி எதிர்பார்க்கிறது. உங்களால் யமுனையை கூட சுத்தப்படுத்தக்கூட முடியவில்லை. ” என்று தெரிவித்துள்ளார்.