காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில், 5,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பெண் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்துள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வந்த பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சில பெண்கள் இன்னும் டிஸ்சார் செய்யப்படவில்லை. தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பெண்களின் நிலை என்பது குறித்து எந்த தகவலும் தெரியாததால் நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு 12 மணியளவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை-பெங்களூரு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமரசம் செய்து போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.