கட்சியே வேணாங்க! விரக்தியில் தேர்தல் ஆணையத்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு, சினிமா இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்ய, இந்தியத் தேர்தல் ஆணையத்தை நாடியதாக தகவல் வெளியானது.

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது எனது தனிப்பட்ட முயற்சி என தெரிவித்த அவர், இதற்கும் விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்று, அவர் விளக்கமும் தந்தார்.

ஆனால், நடிகர் விஜய் இதை ஏற்கவில்லை. எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும்,‌ எனக்கும்,‌ நேரடியாகவோ மறைமுகமாகவோ, எவ்வித தொடர்பும்‌ இல்லை என்றும் அறிக்கை விட்டார்.
மேலும், என்‌ பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய்‌ மக்கள்‌ இயக்கத்தின்‌ பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும்‌ விவகாரங்களில்‌ ஈடுபட்டால்‌ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் எச்சரித்திருந்தார்.

மறுபுறம், கணவர் தொடங்கிய அ.இ.த.வி.ம.இ. கட்சியில் பொருளாளராக நான் இல்லை என்று கூறி, நடிகர் விஜயின் தாய் ஷோபாவும் அதில் இருந்து விலகி, பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே, எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கவிருந்த கட்சியின் தலைவர் பதவியில் இருந்த பத்மநாபனும் ராஜினாமா செய்தார். இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற எஸ்.ஏ. சந்திரசேகர், வேறு வழியின்றி கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டிருப்பதாக தெரிகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு, எஸ்.ஏ. சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் விஜய்க்கு பெரும் தலைவலியாக இருந்த எஸ்.ஏ. சந்திரசேகரின் அரசியல் செயல்பாடுகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பதால், விஜய் தரப்பு நிம்மதியடைந்துள்ளது.

Translate »
error: Content is protected !!