பதிவு செய்யப்பட்ட அனைத்து கரும்பையும் வெட்டும் வரை அரவையை தொடர வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

 

15 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்புகள் வெட்டப்படாமல் கொல்லைகளில் காய்ந்து வரும் நிலையில் வரும் 27 ஆம் தேதியோடு அரவை நிறுத்தப்படுவதாக தஞ்சை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட அனைத்து கரும்பையும் வெட்டும் வரை அரவையை தொடர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையை  நம்பி குருங்குளத்தை சுற்றியுள்ள 30 கிராம விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர் வழக்கமாக அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்த ஆலையில் அரவை பணி தொடங்கும் இந்த ஆண்டு காலதாமதமாக டிசம்பர் இறுதியில்தான் ஆலை அரவை பணியை தொடங்கியது. ஒரு லட்சத்து 80 ஆயிரம் டன் கரும்பு பதிவு செய்யப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு பணி தொடங்கிய நிலையில் இன்னும் 15 ஆயிரம் மெட்ரிக் டன் வரை கரும்பு வெட்டாமால்  கொல்லைகளில் இருக்கிறது.

இந்த நிலையில் வருகிற 27 ம் தேதியோடு நடப்பாண்டுக்கான அரவைப் பணி நிறுத்தப்படும் என்று ஆலை நிர்வாகம் அறிவித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 10 மாதங்களில் வெட்டவேண்டிய கரும்பு 12 மாதங்களைக் கடந்து 15 மாதங்கள் வரை ஆன நிலையிலும் வெட்டப்படாமல் கொல்லைகளில் காய்ந்து வரும் நிலையில், அரவை பணியை நிறுத்தினால் விவசாயிகள் ஒன்றரை ஆண்டுகளாக பாடுபட்டு விளைவித்த கரும்பு வீணாகிப் போய்விடும் எனவும்,  ஏற்கனவே 10 மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்குள் கரும்பு வெட்டப்பட்டால் ஏக்கருக்கு 50 டன் வரை மகசூல் கிடைக்கும் தற்போது 30 டன் கூட கிடைப்பது சிரமமான நிலையில் கரும்பையும் வெட்டாமல் விட்டுவிட்டால் கடனை எப்படி அடைப்பது எனவும், 27 தேதி அரவை நிறுத்தம் என்பதை மாற்றி 15 நாட்கள் நீட்டித்து பதிவு செய்யப்பட்ட அனைத்து கரும்புகளையும் அறுவடை செய்து அரவை செய்ய வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு ஆலையை இருபத்தி ஏழாம் தேதி மூடினால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!