பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
சில்க் போர்டு பகுதியில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் நடுவழியில் நின்றதால் அங்கு நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் ஜேபி நகர், ஜெயநகர், லால்பாக், சிக்பெட், மெஜஸ்டிக், மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், யஷ்வந்த்பூர், எம்ஜி சாலை, கப்பன் பார்க், விஜயநகர், ராஜராஜேஸ்வரி நகர், கெங்கேரி, மாகடி சாலை மற்றும் மைசூர் சாலை உள்ளிட்ட இடங்களும் மழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டன.