தீவிரமாக காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி, காரைக்காலில் 215 குழந்தைகள், பெரியவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிப்புறப் பிரிவில் 559 பேருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஃப்ளூ காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. இதனால், கல்வித் துறை புதுச்சேரி, காரைக்காலில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வரும் 25-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி அரசு மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று அதிகளவு கூட்டம் இருந்தது. ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுடன் பெற்றோர் குவிந்திருந்தனர். காய்ச்சல் குறைவாக இருந்த குழந்தைகளுக்கு மருந்துகள் அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். கடுமையாக பாதிக்கப்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல் அரசு மருத்துவமனையில் வயதானவர்கள் பலரும் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இதேபோல அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழி மையங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் வந்ததால் கூட்டம் அலைமோதியது. காய்ச்சிய குடிநீரை பருகும்படியும், முகக்கவசம் அணியும்படியும் இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலுவிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 35, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் 508, காரைக்காலில் 16 பேர் என 559 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்தனர். நேற்று வரை 38 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர். இன்று அரசு மருத்துவமனையில் 31, மகளிர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 165, காரைக்காலில் 19 பேர் என 215 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்