கர்நாடக பஞ்சாயத்து தேர்தல் : பா.ஜனதா ஆதரவு பெற்றவர்கள் அதிக இடங்களில் வெற்றி

கர்நாடகத்தில் உள்ள 4,728 கிராம பஞ்சாயத்துகளுக்கு 2 கட்டமாக கடந்த 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

 கர்நாடகத்தில் உள்ள 4,728 கிராம பஞ்சாயத்துகளுக்கு 2 கட்டமாக கடந்த 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 90 சதவீத வாக்குகள் பதிவாயின.

கொரோனா நோயாளிகள் வாக்களிக்கவும் வழிவகை செய்யப்பட்டது. ஒட்டுப்பதிவு நாளன்று கடைசி ஒரு மணி நேரம் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் வாக்குகள் பதிவான ஓட்டு பெட்டிகள் அந்தந்த தாலுகா தலைநகரங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

திட்டமிட்டப்படி கிராம பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஓட்டு பெட்டிகளை கொண்டு வந்து மேஜைகளில் ஓட்டு சீட்டுகளை கொட்டி அதை சீர்படுத்தினர்.

வேட்பாளர் வாரியாக ஓட்டு சீட்டுகளை தனியாக பிரித்து கட்டினர். கிராம பஞ்சாயத்து வாரியாக ஓட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவித்தனர். ஓட்டு எண்ணிக்கையின்போது, அந்தந்த கிராம பஞ்சாயத்து வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தேர்தல் முடிவுகளை ஒலிப்பெருக்கிகள் மூலம் தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் குவிந்திருந்தனர். அவர்களை கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் கிடையாது. சுயேச்சையான சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆயினும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்கள், தங்கள் கட்சியின் ஆதரவை பெற்றனர். மொத்தம் 91 ஆயிரத்து 339 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 8,074 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 82 ஆயிரத்து 617 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 814 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நேற்று மாலை 6 மணி வரை வெளியான தேர்தல் முடிவுகளில், ஆளும் பா.ஜனதா ஆதரவு பெற்றவர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது பா.ஜனதா ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 8 ஆயிரம் இடங்களிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவாளர்கள் 6 ஆயிரம் இடங்களிலும், ஜனதா தளம் (எஸ்) ஆதரவாளர்கள் 3 ஆயிரம் இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

ஆளும் பா.ஜனதா ஆதரவில் போட்டியிட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

 

 

Translate »
error: Content is protected !!