நீட் தேர்வு எழுதிய மாணவன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு

திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவன் எவல்ட் டேவிட் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
“நான் 12 ஆம் வகுப்பு முடித்து கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்காக நீட் தேர்வில் பங்கு பெற்றேன். தேர்வை நல்ல முறையில் எழுதி இருந்தேன். இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கேள்விக்கான விடைகளை (answer key) வெளியிட்டது அதில் எனக்கு 720 மதிப்பெண்களுக்கு 670 விடைகள் சரியாக இருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் பதில் எழுதிய OMR விடைத்தாள் பக்கங்களை பதிவேற்றம் செய்துள்ளது. அதை பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த OMR பதில் தாள் என்னுடையது அல்ல. அதில் எனக்கு 115 மதிப்பெண்கள் மட்டுமே வரும். அந்த OMR விடைத்தாள் நான் எழுதியது இல்லை. எனது விடைத்தாள் திருடப்பட்டு உள்ளது. இதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது. எனவே எனது அசல் OMR விடைத்தாள் மற்றும் கார்பன் நகல் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் எனது விடைத்தாள் மோசடி குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மருத்துவ கலந்தாய்வில் எனக்காக ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், மாணவரது நீட் தேர்வின் அசல் OMR விடைத்தாள் மற்றும் அதனுடைய கார்பன் விடைத்தாள் இரண்டையும் நீட் தேர்வு முகமையின் செயலர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Translate »
error: Content is protected !!