தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்ட யூ-டியூச் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தே.மு.தி.க சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் தே.மு.தி.க சார்பில் அக்கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பிய இரு யூ-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பார்த்தசாரதி, கடந்த 5 நாட்களுக்கு முன் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு நீரிழிவு நோய் உள்ள நிலையில் காலில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து விரல்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் உள்ளார் எனவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் அன்றைய தினமே கட்சியின் தலைமை கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டதாக கூறிய அவர், ஆனால் குறிப்பிட்ட இரு யூ-டியூப் சேனல்கள் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டதாக குற்றஞ்சாட்டினார். மேலும், உண்மைக்குப் புறம்பான இந்தச் செய்தியால் கட்சித் தொண்டர்கள் பதற்றம் அடைந்து தன்னையும், கட்சி தலைமை அலுவலகத்தையும் அணுகியதாகதால் பரபரப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊடக சுதந்திரம் என்பது உண்மையான செய்திகளை வெளியிடுவதே எனவும், இதுபோன்ற குழப்பத்தை உருவாக்கி மக்களிடையே பதற்றத்தை அதிகரிக்கும் செய்திகளை வெளியிடுவது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார். மேலும், சம்மந்தப்பட்ட இரு யூ-டியூப் சேனல்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் பார்த்தசாரதி தெரிவித்தார்.