கடந்த ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ திருமணத்தில் கலந்து கொண்ட திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க பேனர் வைக்கப்பட்டபோது, 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதையடுத்து, விழுப்புரத்தை சேர்ந்த மோகன்ராஜ், என்பவர் சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேனர் கலாச்சாரத்தை தொடர வேண்டாம் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியதாகவும், பேனர்கள் வைக்கும் நிகழ்வுகளுக்கு அவர் செல்லமாட்டார் என்றும் தமிழக அரசு விளக்கமளித்தது.
இந்த நிலையில், “தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முற்றிலுமாகத் தடுக்க விதிமுறைகளை உருவாக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்து, திமுக மற்றும் தமிழக அரசு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.