தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகளவில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 2ம் தேதி இந்தியாவுக்குள் இந்த வைரஸ் நுழைந்தது. தற்போது எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது. இது டெல்டா வைரஸை விட குறைந்தது 3 மடங்கு வேகமாகப் பரவும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே 34 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் 19வது தெருவில் சில நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது இதையடுத்து மேலும் சிலருக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த தெருவில் உள்ள 83 பேரிடம் மாதிரி எடுத்து சோதனை செய்தனர். அந்தத் தெருவில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால், அந்தத் தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. நுழைவாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.