கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூர் கெலவரப்பள்ளி அணை மதகுகளில் ரோப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி அணையில் இருந்து நீர் அதிகப்படியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் வெளியேறும் இடங்களில் இரசாயன நுரைகள் பொங்கி வருகிறது.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேற்ற 7 மதகுகள் உள்ளது. இது தவிர வலது புற மற்றும் இடது புற கால்வாய்களும் உள்ளது. இந்த ஏழு மதகுகளில் உள்ள ரோப்கள் சரி செய்யும் பணிகள் மற்றும் இதர பராமரிப்பு பணிகள் இன்னும் ஒரு இரு நாட்களில் நடைபெற உள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து அதிகப்படியாக நீர் மதகுகளின் வழியாக ஆற்றில் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், தற்போது அணைக்கு 518 கனஅடி நீர் வரத்தாக உள்ளது. அணையில் இருந்து 1060 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக 34.60 அடியாக இருந்த நீர்மட்டம் 32.14 அடியாக குறைந்து இன்று 29.19 அடியாக வந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 24 அடிக்கு வந்த பின்னர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மொத்தமாக 15 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையில் தண்ணீர் திறந்து விடும் பகுதிகளில் இரசாயன நுரைகள் பொங்கி செல்கிறது. நுரைகள் திட்டு திட்டாகவும் பொங்கியும் காற்றில் பறந்து வருகிறது. அணையில் உள்ள நீர் குறைந்து வருவதால் அணை பகுதிகள் உள்ள பாறைகள் ஆங்காங்கே பல இடங்களில் வெளியே தெரிகின்றன.