தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்னர் ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்த நிலையில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனகலுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இந்நிலையில் மெயின் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல், சத்திரம், ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.