புவிசார் குறியீடு நெட்டி வேலைப்பாடு கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கு திறப்பு

 

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு நெட்டி வேலைப்பாடு கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கு திறக்கப்பட்டது.

மத்திய அரசின் 2022-23-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு பொருள் என்ற திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தில் உள்ளூர் கைவினைப் பொருட்கள் மற்ரும் கலை பொருட்கள் விற்பனையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் அதற்கான விற்பனை அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 6 ரயில்வே கோட்டங்களில் முதற்கட்டமாக கோட்டத்துக்கு ஒன்று வீதம் கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கு திறக்கப்பட்டது. இந்த திட்டத்தில் திருச்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில்வே நிலையம் தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தஞ்சாவூரின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற நெட்டி அரங்கு அமைக்கப்பட்டது. இந்த அரங்கை தஞ்சாவூர் ரயில்வே நிலைய மேலாளர் சம்பத்குமார் திறந்து வைத்தார்.  இந்த அரங்கில் நெட்டியால் தயார் செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சிலை, ராஜ ராஜ சோழனுடன் கூடிய பெரிய கோயில், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீராமர், நாகூர் தர்கா, முனீஸ்வரன் கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் கோபுரங்கள் மற்றும் நெட்டியால் தயார் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை ரயில்வே நிலையத்திற்கு வந்த பயணிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் பார்வையிட்டு நெட்டியால் தயார் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி சென்றனர். இந்த திட்டம் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் உள்ளுர் கலைப் பொருட்களை நாடறிய செய்யவும் உறுதுணையாக உள்ளது.

 

Translate »
error: Content is protected !!