தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு இருந்தாலும் குளிர்காலம் தொடங்கும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை காற்றின் தரம் என்பது மிக மோசம் என்ற நிலையில் இருக்கும். காற்று மாசை தடுக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான நடவடிக்கை ஒரு புறம் எடுத்து வந்தாலும் நடவடிக்கை என்பது காற்று மாசு உச்சத்தில் இருக்கும் பொழுது மட்டும்தான் அரசு எடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் உள்ளிட்ட கார்ப்பரேஷன்கள் உயரமான மரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, சாலைகளை நவீன எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்வது, குப்பைகளை எரிப்போர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பது கட்டுமான பணிகளின் பொழுது உரிய நடைமுறை பின்பற்றாத நபர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
காற்று மாசுக்கு மிக முக்கிய காரணியாக இருக்கும் அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளுடன் விவசாயிகள் தங்களுடைய பயிர் கழிவுகளை எரிக்காமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லியை பொருத்தமட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக மின்சார வாகன போக்குவரத்தை அதிகப்படுத்த தேவையான சலுகைகளை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. காற்று மாசு உச்சத்தில் இருக்கும் போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.