தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செயல்முறை சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை இணைத்து அனுப்புவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி, இப்பிரச்சனை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டிற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.