ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டண பட்டியல்: சங்கத்தினர் தகவல்

தன்னிச்சையாக கட்டண உயர்வை அன்மையில் அறிவித்திருந்த நிலையில் நேற்று அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது கட்டணங்களை குறைத்து புதிய பட்டியல் வெளியிட உள்ளதாக ஆம்னி பேருந்து சங்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். ஆயுத பூஜைக்கு முன்பாக , இம்மாத இறுதிக்குள் ஆம்னி பேருந்துகளுக்கான குறைக்கப்பட்ட புதிய கட்டண பட்டியல் வெளியாகிறது.

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ஆம்னி பேருந்து சங்கங்களுடன் நேற்று பேச்சு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் புதிய கட்டண பட்டியல் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என ஆம்னி பேருந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் .

புதிய கட்டண பட்டியலில் ஏற்கனவே அறிவித்திருந்ததை காட்டிலும் கட்டணங்கள் குறைவாக நிர்ணயிக்கப்படும் என அச்சங்கத்தினர் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத் தொகையை குறைப்பது தொடர்பாக ஆம்னி பேருந்துகளின் முக்கிய ஆப்ரேட்டர்கள் இன்று மாலை இணைய வழியில் ஆலோசிக்க உள்ளனர்.

இந்நிலையில் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ள ஆயுத பூஜை பண்டிகைக்கான ஆம்னி பேருந்து முன்பதிவுக் கட்டணங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளன. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல குறைந்த பட்சம் 2500 முதல் அதிபட்சம் 4ஆயிரம் ரூபாய் வரையும்,
அதேபோல சென்னையில் இருந்து கோவை செல்ல குறைந்த பட்சம் 2800 முதல் அதிபட்சம் 3200 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது.

மேலும் சென்னையில் இருந்து மதுரை , திருச்சி , தூத்துக்குடி , கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்ல அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட 3 மடங்கு வரை கட்டணம் உயர்ந்து உள்ளது . கடந்த வாரம் ஆம்னி பேருந்து சங்கங்கள் வெளியிட்ட கட்டணப் பட்டியலில் திருச்சிக்கு குறைந்தபட்ச கட்டணம் 880 ரூபாய் , மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணம் 1, 170 ரூபாய் , கோவைக்கு 1230 ரூபாய் நெல்லைக்கு 1230 ரூபாய் என்றும் கட்டணத்தை அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றனர்.

நேற்று அமைச்சர் சிவசங்கர் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது புதிய கட்டண பட்டியலை வெளியிட தயாராக உள்ளதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!