மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்டோர் ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015 ஆம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல காலமாக செவிலியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் கலைஞர் கருணாநிதி சிலை அருகே 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரெனபோராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து செவிலியர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். போராட்டம் குறித்து பேசிய செவிலியர் இளங்கோ:
”கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரசு நடத்தக்கூடிய தேர்வில் வெற்றி பெற்றும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம், இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது திமுக தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி எங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அதற்கான உத்தரவாதத்தை சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும்” என்று கூறினார்