நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. அதன்படி, பல நகரங்களில் பெட்ரோல் விலை 100ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 106.35 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
அதேபோல் சமையல் எரிவாயுவின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை, 260 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் விற்பனை விலை 2,000க்கு மேல் விற்கப்படுகிறது. இருப்பினும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை மாறாமல் ரூ.915.50 ஆக உள்ளது.
இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிஜு ஜனதாதள தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலிண்டரை உயர்த்தியும், மண் அடுப்பில் சமைத்தும், கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.