நிதிநெருக்கடியால் தவித்து வரும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கடனைச் செலுத்துவதற்கு 4 வருடங்கள் விலக்களித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தொலை தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் வோடபோன், பாரதி ஏர்டெல் போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தன. குறிப்பாக நிதிச்சுமையை சமாளிக்க முடியாமல், வோடபோன் நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து குமார மங்கலம் பிர்லா பதவி விலகினார்.
இந்நிலையில் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கடனைச் செலுத்துவதில் இருந்து 4 வருடங்கள் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. மேலும் அலைக்கற்றை உரிமம் மற்றும் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும் முறையை மறுசீரமைப்பு செய்யவும் முடிவு செய்துள்ளது. மேலும் தொலை தொடர்புத்துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொலை தொடர்புத்துறையில் ஒன்பது கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் ஐந்து செயல்முறை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் இத்துறை பலமடங்கு வளர்ச்சி அடையும் என மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.