தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, இந்தியாவின் 21 மாநிலங்களில் 653 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 42 மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், புத்தாண்டை பொது இடங்களில் கொண்டாட வேண்டாம் என தமிழக மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், “தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றுக்கு 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 118 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒமைக்ரான் வைரஸால் எதனை பேர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதன் முடிவுகள் வந்த பிறகே தெரியவரும்.
தமிழகத்தில் இரவு நேர ஊரங்கு குறித்து டிசம்பர் 31-ம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தெரிய வரும். சென்னையில் கடந்த சில நாட்களாக நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்களிடையே முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கண்காணிக்கப்படும். புத்தாண்டை பொது இடங்களில் கொண்டாட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.