காவல் நிலைய விசாரணை கைதி சந்தேக மரணம் – வழக்கு விசாரணை

 

சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி சந்தேக மரண வழக்கு தொடர்பாக ஏற்கனவே 30 போலீசாரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று 20 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் சந்தேக மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். விசாரணை அதிகாரி சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கொடுங்கையூர் காவல் நிலையம், கொடுங்கையூர் எவரெடி போலீஸ் பூத், தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆய்வு நடத்தி அங்குள்ள சி.சி.டி.வி பதிவுகளை கைப்பற்றி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் ஏற்கனவே நேற்று முன் தினம் ஒரே நாளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை கைதி ராஜசேகரன் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போது அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எந்த வழக்கிற்காக ராஜசேகரன் அழைத்து வரப்பட்டார்? வழக்கு தொடர்பாக காவல் நிலைய பதிவேடு மற்றும் ஆவணங்களில் முறையாக அவரின் கைது தொடர்பாக பதிவு செய்யப்பட்டதா?. சம்பவத்தன்று காவல் நிலையத்தில் என்ன நடந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கு 30 போலீஸாரிடமும் பதில்கள் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் மேலும் 20 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் நடத்தப்பட்டு வரும் இந்த விசாரணை முடிந்தவுடன் உயிரிழந்த ராஜசேகரின் குடும்பத்தினருடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் கொடுத்து நேரில் வரவழைத்து விசாரணை நடத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!