குறைந்தபட்சம் பிப்ரவரி வரையாவது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்தியா 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு ஒவ்வொரு மாநிலமும் தனது பங்கை செலுத்தி உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 5.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது நம்மிடம் 53.84 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் பிப்ரவரி வரையாவது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார்.