நாளை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். அண்ணா ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்திகிறார் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை ஆனார். அப்போது அவரது ஆதரவாளர்கள் வழிநெடுக திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து விடுதலையான பிறகு தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அவர் கூறியிருந்தார். சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல சசிகலா திட்டமிட்டார். ஆனால் பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி அப்போது இருந்த அ.தி.மு.க. அரசு நினைவிடத்தை மூடி வைத்திருந்தது. இதனால் சசிகலாவால் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி முதல் முறையாக நாளை காலை 11 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேரில் சென்று சசிகலா மரியாதை செலுத்துகிறார். சசிகலாவை வரவேற்பதற்கு அவரது ஆதரவாளர்களும் நாளை ஜெயலலிதா நினைவிடத்தில் திரள்கிறார்கள். இதற்காக டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களும், சசிகலா ஆதரவாளர்களும் நாளை ஆயிரக்கணக்கில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் முன்பு கூடுகிறார்கள்.