தஞ்சாவூர் வடக்கு வீதியில் இருந்த எம்.ஜி.ஆர். சிலையை இரவோடு இரவாக மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்ததாக கூறப்படுகிறது. சிலையை பெயர்த்தெடுத்தவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
புரட்சித்தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும், இத்தகைய விஷமச் செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.