ஆவின் இனிப்புகள் வரலாறு காணாத விலை உயர்வு: பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு பால் கொள்முதல் விலையை சிறிதளவு கூட உயர்த்தாத நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மற்றும் 2022 நடப்பாண்டில் மார்ச், ஜூலை மாதங்களில் நெய், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தியது.

இந்த நிலையில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனத்தின் சார்பில் 200கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும், ஆவின் மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனம், லாப நோக்கத்தோடு செயல்படும் வணிக நிறுவனமல்ல என ஊடகங்கள் முன்பு பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள் தொடர்ந்து பேசி வந்த நிலையில், இன்று (16.09.2022) முதல் குளோப் ஜாமூன், ரசகுல்லா, பால்கோவா, பால்பேடா, மைசூர்பாக், பிரிமியம் மில்க் கேக் உள்ளிட்ட 7வகையான ஆவின் இனிப்புகளுடைய விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் கிலோவிற்கு 80.00ரூபாய் வரை உயர்த்தி 15.09.2022தேதியிட்ட அறிவிப்பின் மூலம் நிர்வாக இயக்குனர் திரு. சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனம் தானே தவிர லாப நோக்கத்தோடு செயல்படும் வணிக நிறுவனமல்ல ஆவின் என ஊடகங்கள் முன்பு பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், பால்கோவா, மைசூர்பாக் இனிப்புகளால் ஆவின் நிறுவனம் சுமார் சுமார் 200% லாபம் அடைந்து வரும் நிலையில் அதெல்லாம் போதாது என்று தற்போது அவற்றின் விற்பனை விலையை உயர்த்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

35லிட்டர் பால், 4.5கிலோ சர்க்கரை மூலம் 10.5கிலோ பால்கோவா கிடைக்கிறது. பால், சர்க்கரை, ஆள்கூலி, கவர், போக்குவரத்து செலவுகள் உட்பட பால்கோவா ஒரு கிலோ அடக்க விலை அதிகபட்சமாக 190.00ரூபாய் வரை தான் ஆகும். பால்கோவா இனிப்பிற்கு பெயர் போன விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரபல இனிப்புக்கடையின் விற்பனை விலையே ஒரு கிலோ 300.00ரூபாய் எனும் போது ஆவினில் ஒரு கிலோ பால்கோவா 500.00ரூபாய் என்பது பகல் கொள்ளையை விட படுமோசமானதாகும்.

ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு 200கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்து விட்டு தற்போது அதன் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்த இலக்கு வைத்து செயல்படுவதை வன்மையாகக் கண்டிப்பதோடு இந்த விற்பனை விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்து தனியார் நிறுவனங்களை நோக்கி செல்ல வைக்கும்.

அதனால் ஆவினின் விற்பனை பாதிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரிக்கை செய்து இந்த விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

மேலும் கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 12.00ரூபாய் (மூன்று முறை 5+3+4) உயர்த்தப்பட்டதின் காரணமாக அந்தந்த காலகட்டங்களில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்த்தப்பட்டதில் ஒரு நியாயம் இருந்தது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3.00ரூபாய் குறைத்ததால் ஆண்டுக்கு சுமார் 270கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாலும், உற்பத்தி செலவினங்கள் அதிகரித்து விட்டது என்கிற காரணத்தைக் கூறியும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமலேயே நடப்பாண்டில் மட்டும் கடந்த மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்திய நிலையில் தற்போது ஆவின் இனிப்புகளின் விற்பனை விலையையும் வரலாறு காணாத வகையில் உயர்த்துவதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் பால் பொருட்களின் விலையை மட்டும் இதே போல் உயர்த்தி கொண்டே சென்றால் பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வழங்குவதை மறுபரிசீலனை செய்வார்கள், நுகர்வோராகிய பொதுமக்களும் ஆவின் பால் பொருட்களை தவிர்த்து தனியார் நிறுவனங்களின் பால் பொருட்களை வாங்கவே விரும்புகின்ற நிலை வரும்.

அப்படி ஒரு நிலை வரும் போது ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்வதை பால் முகவர்கள் புறக்கணிக்க நேரிடும் என்பதனை தமிழக அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!