இந்தியாவில் அடுத்த இரு மாதங்களில் குளிர்காலம், பண்டிகை காலங்கள் வருவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, இந்த காலகட்டம் மிக முக்கியமானது என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றி, இன்று உலக நாடுகளை கொரோனா வைரஸ் சின்னாபின்னமாக்கி வருகிறது. உலக அளவில் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
சமீப நாட்களில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. மேலும், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 65.24 லட்சத்தை தொட்டுள்ளது.
அதேநேரம், அடுத்து குளிர்மாதங்கள் மற்றும் பண்டிகைக்காலம் வருவதால், கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கூறியதாவது:
கொரோனாவுக்கு எதிராக இந்தியா தீவிரமாக போரிட்டு வருகிறது. இதில், அடுத்த இரண்டரை மாதங்கள் மிக முக்கியமான காலகட்டம். ஏனென்றால், குளிர்காலத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது நெருக்கமாக கூடுவர். எனவே, கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இரண்டு மாதங்கள் மிக முக்கியமானவை.
கொரோனா வைரஸில் இலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து விரைவில் மக்களுக்குக் கிடைக்கும் என்றார்.