அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
கர்நாடகத்தின், மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் வனப்பகுதி மூழ்குவதால் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்டும் பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளதாக செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து, நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு குழுவை அமைத்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், மேகதாது திட்டம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) பெங்களூருவில் முதல்–மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடப்பதாக கர்நாடக சட்டத்துறை மற்றும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார். இதில் மாநில அரசின் அட்வகேட் ஜெனரல், நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகள், மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீட்டு பிரச்சினையில் அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநர்கள், மூத்த வக்கீல்கள் கலந்து கொள்கிறார்கள்.