அமித்ஷாவின் மாயாஜாலம் தமிழ்நாட்டில் பலிக்காது: ஜவாஹிருல்லாஹ் பேட்டி

அமித்ஷாவின் மாயாஜாலம் தமிழ்நாட்டில் பலிக்காது என்று, மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் திருச்சியில் தெரிவித்தார்.

இது தொடர்பாக, திருச்சியில் அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அரசு நிகழ்ச்சியில் அறிவித்துள்ளனர். அதை அமித்ஷா ஆமோதித்து பேசியிருக்கிறார். அரசு நிகழ்ச்சியில் இவ்வாறு அரசியல் பேசியது மரபுகளை மீறிய செயல்.

பாஜக வாரிசு அரசியலை முறியடித்து வருவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். அந்தப் பேச்சு நகைச்சுவையாகவே உள்ளது. காரணம் இவருடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பிசிசிஐ கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய பதவியில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வாரிசுகள் பலர் பாஜகவில் அமைச்சர்களாக,எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆக இருந்து வருகிறார்கள். பொய்மைகளை பேசி கட்சியை வளர்ப்பதே பாஜகவின் நிலையாக உள்ளது.
மத்தியில் பாஜக இருப்பதால், தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்துவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமல்ல தமிழக மக்களின் உரிமைகளும் பறிபோய்விட்டது.

நீட் தேர்வு,புதிய கல்வி கொள்கை போன்றவை மூலம் தமிழக மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு வர வேண்டிய திட்டங்கள் எல்லாம் குறைந்து போய் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊழலை விசாரிக்க கூடிய அளவிற்கு ஒரு குழு அமைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது போல சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வி அடையும். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு வரும்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது போன்றது. சென்னையில் அமித்ஷா வந்த போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

கொரோனா பரவல் விதிமுறையை ஆளுங்கட்சியினர் மீறினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.ஆனால் எதிர்கட்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாரப்பட்சமின்றி கொரோனா விதிமுறைகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு ஒரு தனி அரசியல் கலாச்சாரம் உண்டு. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகம். அமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் பீகார் ,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களில் பலித்தது போல தமிழகத்தில் பலிக்காது என்று, ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!