இனிதான் உண்மையான தர்ம யுத்தம் ஆரம்பம் – டிடிவி தினகரன்

சென்னை,

உண்மையான தர்ம யுத்தம் இப்போது தான் தொடங்கியிருக்கிறது என்று அமமுக நிறுவனரும் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நாங்கள் பாண்டவர்கள் என்றும் துரியோதனன் கூட்டத்தையும் தீய சக்தி கூட்டத்தையும் எதிர்த்து தர்மத்தை நிலைநாட்ட போரிடுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேட்புமனு நேர்காணல் என தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. சசிகலாவை நம்பியிருந்தார் டிடிவி தினகரன். ஜெயலலிதா ஆட்சியை சசிகலா தலைமையில் அமைப்போம் என்று கூறி வந்த டிடிவி தினகரனுக்கு அரசியலில் இருந்து விலகி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் சசிகலா.

இருந்தாலும் எதனையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் தேர்தல் களத்தில் தனித்து களமிறங்கியிருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் அமமுக விருப்பமனு பெற்றுள்ளது. விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

திமுகவை தோற்கடிப்பதுதான் லட்சியம் என்று சொல்லும் டிடிவி தினகரன், அதிமுகவை எதிர்த்துதான் அதிக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணலுக்கு வந்த டிடிவி தினகரன், மற்ற கட்சி பற்றி பேச விரும்பவில்லை.

நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறோம் என்று கூறினார். உண்மையான தர்ம யுத்தம் இப்போது தான் தொடங்கியிருக்கிறது என்று கூறியுள்ள டிடிவி தினகரன், பாண்டவர்கள் ஆகிய நாங்கள் துரியோதனன் கூட்டத்தையும் தீய சக்தி கூட்டத்தையும் எதிர்த்து தர்மத்தை நிலைநாட்ட போரிடுகிறோம் என்றும் தெரிவித்தார்.

கூட்டணி கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார். எங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவில் எம்எல்ஏ சீட் தருவதாக கூறப்படுவது பொய்யான செய்தி. டெல்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த வதந்தியை பரப்புவதாகவும் கூறினார் டிடிவி தினகரன்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சசிகலாவை பார்த்து பேசிவிட்டு வந்த டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க அமமுக தொடர்ந்து போராடி வருகிறது. அமமுக தலைமையை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்.

என்னை யாரும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை. யாருக்கும் அடிபணியவும் மாட்டேன் என்று கூறியிருந்தார். இன்றைய தினம் உண்மையான தர்மயுத்தம் இனிதான் ஆரம்பம் என்று தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தல் களம் நிஜமாகவே களைகட்ட ஆரம்பித்து விட்டது.

Translate »
error: Content is protected !!