உளவுத் துறை ரிப்போர்ட்…. கட்சியில் இருந்து விலகியது ஏன்..? சசிகலா பிளான் என்ன.?

சென்னை,

சிறையிலிருந்து வந்த சசிகலா நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கூறி அதிமுகவுக்கு ஷாக் கொடுத்த நிலையில் நேற்று ஏன் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என அறிவித்தார் என்பது குழப்பமாகவே இருக்கிறது.

ரஜினிகாந்தும் இது போல் வரேன் என்றால் வரமாட்டேன் என்றார்தான். ஆனால் இவர் 25 ஆண்டுகளாக இதைத்தான் செய்து வருகிறார். இதனால் ரஜினியின் முடிவு அவரது ரசிகர்களைத் தவிர வேறு யாருக்கும் அதிர்ச்சியை அளிக்கவில்லை.

ஆனால் சசிகலா அப்படியில்லை. சிறைக்குச் செல்லும் போது ஜெயலலிதாவின் சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தார். இதையடுத்து சிறையிலிருந்து வந்த அவர் கெத்தாக காரில் அதிமுகக் கொடியுடன் வலம் வந்தார்.

பல தடங்கல்கள் வந்த போதிலும் கொடியை அவர் விடவே இல்லை. சென்னைக்கு வந்த போதும் கூட அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றே முழங்கினார். திநகர் வீட்டிலும் கூட அவ்வப்போது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்ததாகவே கூறப்படுகிறது.

இதனால் சசிகலாவின் தாக்கம் நிச்சயம் அதிமுக வெற்றியை சிதறடிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை பார்ப்போம். முதலில் கருத்து கணிப்பு முடிவுகளை வைத்து பார்க்கும் போது திமுகவே ஆட்சி அமைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அது போல் உளவுத்துறை ரிப்போர்ட்டும் அப்படியே சொல்கிறது.

அவ்வாறிருக்கையில் அதிமுக தோற்றால் அது தன்னால் தோற்றதாக இருக்கக் கூடாது என சசிகலா நினைத்திருக்கலாம். மேலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் என கூறிக் கொள்ளும் சசிகலா ஒரு போதும் அக்கட்சி ஆட்சியிழப்பிற்கு காரணமாக இருந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

மேலும் 2016-ஆம் ஆண்டுக்கு பிறகு தன்னால் உருவான அதிமுக ஆட்சிக்கு தன்னால் எந்த பங்கமும் ஏற்படக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். மேலும் சசிகலாவின் குறி ஆட்சி , அதிகாரமில்லை. அவருக்கு தேவை கட்சிதான்.

அதிமுகவை கைப்பற்றி அதன் பொதுச் செயலாளராகி விட வேண்டும் என்பதே அவரது லட்சியம். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட கூடாது என்ற விதிமுறை உள்ளது.

ஏற்கெனவே 4 ஆண்டுகள் போன நிலையில் இன்னும் 6 ஆண்டுகளுக்கு அவர் போட்டியிட முடியாது. இதையெல்லாம் அவர் தனது வழக்கறிஞர்களுடன் நன்கு ஆலோசனை செய்துவிட்டே தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புலி பதுங்குவதே பாய்வதற்குத்தான் என்பதை அவர் விரைவில் நிரூபிப்பார் என்கிறார்கள். பதுங்குவது போல் பதுங்கி ஈபிஎஸ்ஓபிஎஸ்ஸால்தான் அதிமுக தோற்றது என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கி தொண்டர்களை தன்வசம் இழுத்து கொள்ளவே சசிகலா பிளான் செய்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு எடப்பாடி ஆட்சியை உருவாக்கியதன் மூலம் தியாகத்தலைவியானார். அது போல் இந்த முறை அதிமுகவை எதிர்க்காமல் அவர்களுக்கு வழிவிட்டு தான் தியாகி என்பதை மேலும் மேலும் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவே இந்த முடிவு என்கிறார்கள்.

 

Translate »
error: Content is protected !!