உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற 5 மாதத்தில் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தன.
இதில் ஒரேநாள் இரவில் 23 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு காரணம் என்று கூறி குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல்கான் உட்பட 9 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதில் கஃபீல் கான் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றியதாக கஃபீல் கானை அனைவரும் பாராட்டினர். ஆனால் பின்னர் குழந்தைகள் இறப்புக்கு கஃபீல் கான் தான் காரணம் என்று கூறி அவரை உ.பி.அரசு கைது செய்தது.
அவர்களில் கஃபீல் கான் தவிர மற்ற அனைவரும் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் சேர்க்கப்பட்டனர். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கஃபீல் கான் அனைத்து குற்றத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்தார். சுப்ரீம் கோர்ட் தலையிட்ட பிறகே விடுதலை செய்யப்பட்டார். ஆனால் பணியில் மட்டும் இன்னும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
இதனிடைட்யே, தேசிய குடியுரிமைச்சட்டம் குறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேசியதற்காக கஃபீல் கான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அலகாபாத் உயர்நீதிமன்றம் கஃபீல் கான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் கஃபீல் கான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 2017-ம் ஆண்டே ஆக்சிஜன் கொள்முதலில் உள்ள சிக்கல் மற்றும் பற்றாக்குறை குறித்தும், சிறந்த மருத்துவ கொள்கை உருவாக்குவது அவசியம் என்றும் வலியுறுத்தினேன்.
இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் நான் சிறையில் அடைக்கப்பட்டேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கஃபீல் கான் மீது மொத்தம் 9 விசாரணைகள் நடந்தது. இதில் எதிலும் அவர் குற்றவாளி என்று முடிவாகவில்லை. எனவே அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளும்படி அகில இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் உத்தரப்பிரதேச அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. டாக்டர் கஃபீல் கானுடன் சேர்த்து சஸ்பென்ட் செய்யப்பட்ட அனைவரும் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதையும் அந்த சங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்நிலையில் டாக்டர் கஃபீல் கான் `தன்னை மீண்டும் பணியில் சேர்த்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வாய்ப்பு கொடுக்கவேண்டும். எனக்கு அவசர சிகிச்சை பிரிவில் 15 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவத்தை கொண்டு பலரது உயிரை காப்பாற்ற முடியும். கொரோனா சரியான பிறகு வேண்டுமானால் மீண்டும் என்னை சஸ்பென்ட் செய்து விடுங்கள்’ என்று கஃபீல் கான் உத்தரப்பிரதேச முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் அலுவலகம், `முறைப்படி கஃபீல் கான் அரசு இணையத்தில் விண்ணப்பிக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய மெடிக்கல் அசோசியேசனும் கஃபீல் கான் மீதான பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கஃபீல் கான் இது குறித்து அளித்த பேட்டியில், “நாடு தற்போது கடுமையான சவாலை எதிர்நோக்கியுள்ளது. கொரோனா காலத்தில் கடந்த ஒரு ஆண்டில் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் இறந்துவிட்டனர். உத்தரப்பிரதேச சுகாதார சிஸ்டம் மிகவும் மோசமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்