நாட்டின் எரிபொருள் தேவை, ஆகஸ்ட் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளதாக, பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, மிகப்பெரிய சரிவு ஆகஸ்டில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், பெட்ரோலை பொறுத்தவரை, ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. மக்கள் சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால், பெட்ரோல் விற்பனைஅதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பெட்ரோலிய பொருட்கள் விற்பனை, இதற்கு முந்தைய மாத விற்பனையை விட, 7.5 சதவீதம் சரிந்து, 1.44 கோடி டன்னாக உள்ளது. இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, 16 சதவீத சரிவாகும்.தொடர்ந்து ஆறாவது மாதமாக, கடந்த ஆகஸ்டிலும் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால், 48.6 சதவீதம் அளவுக்கு விற்பனையில் சரிவு ஏற்பட்டது.அடுத்த இரு மாதங்களில் ஓரளவு மீட்சி ஏற்பட்ட போதும், மீண்டும் ஜூலையிலிருந்து சரிவு காணத் துவங்கியது. நாட்டில் மிக அதிக அளவு நுகரப்படும் எரிபொருளான டீசல் விற்பனையிலும், முந்தைய ஜூலை மாதத்துடன் பெட்ரோல் விற்பனையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 7.4 சதவீதம் சரிந்துள்ளது. இருப்பினும், கடந்த ஜூலையுடன் ஒப்பிடும்போது, 5.3 சதவீதம் அதிகரித்துள்ளது.மக்கள் பொது போக்கு வரத்தை பயன்படுத்தாமல், சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால், பெட்ரோலுக்கான தேவை அதிகரித்துள்ளது.சமையல் எரிவாயு விற்பனையில், கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது பெரிய மாற்றம் ஏதுமில்லை. மண்ணெண்ணெய் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 43 சதவீதம் சரிவாகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில் துறை வட்டாரங்கள், கொரோனா பாதிப்புக்கு முந்தைய நிலையை அடைய, குறைந்தது, 3 – 4 மாதங்கள் ஆகலாம் என தெரிவித்துள்ளன.அக்டோபர்-, நவம்பர் மாதங்களில் பண்டிகை காலம் துவங்குவதால், அப்போது தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.ஆனாலும், கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டுவது, புதிய ஆண்டிற்கு முன்னதாக இருக்காது என்றும் தெரிவித்து உள்ளன.