காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொங்கல் அன்று தமிழகம் வருகை

சென்னை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 14–ந்தேதி தமிழகம் வரவிருக்கிறார். அன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அவர் பார்வையிடுகிறார்.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகள் விழாகோலம் கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழா பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைக்கிறார்கள். இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட 14ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ராகுல்காந்தி முதல்கட்டமாக தமிழகத்தில் 3 நாள்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார். ராகுல்காந்தி வரும் தினத்தன்று பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!