மத சுதந்திரத்தை மறுத்து சிறையிலடைக்கும் குஜராத் அரசின் லவ் ஜிஹாத் சட்டம் – இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதலாகும் – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்..!
குஜராத் மாநில பாஜக அரசு கொண்டு வந்துள்ள ‘மத சுதந்திரம் சட்டம் 2003’ மீதான திருத்த சட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் குஜராத் மாநில நிர்வாகக் குழு கடுமையாக கண்டித்துள்ளது. இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மறுப்பதாகும்.
எஸ்டிபிஐ கட்சியின் குஜராத் மாநில தலைவர் முஹம்மது இர்ஷாத் லீல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது நாடு ஒவ்வொரு குடிமகனுக்கும் மத சுதந்திரத்தை இந்திய அரசியலமைப்பு சட்டம் 25 முதல் 28 வரையிலான சரத்துகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் குஜராத் அரசு இந்த அடிப்படை உரிமையை மறுத்து முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ சமூக மக்களை துன்புறுத்தி, சிறையிலடைக்க ‘லவ் ஜிஹாத்’ என்ற பொய்யை பயன்படுத்தி திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.” என்றார்.
மேலும் இர்ஷாத் லீல்கர் குறிப்பிடுகையில், “கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சரான கிஷன் ரெட்டி மக்களைவையில் அளித்த எழுத்துபூர்வ பதிலொன்றில், மத்திய விசாரணை அமைப்புகளிடம் ‘லவ் ஜிஹாத்’ என்ற வகையில் நாட்டில் எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யபட்டவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வ தகவல் இருந்தபோதும் பாஜக ‘லவ் ஜிஹாத்’ என்ற போலி வெறுப்பு பிரச்சாரத்தை நாட்டில் நடத்தி வருகிறது. இந்த பிரச்சாரத்தின் மூலம் வகுப்புவாத சண்டையை உண்டாக்கி, மத அடிப்படையிலான ஆதரவுகளை ஒருங்கிணைத்து அதன் மூலம் ‘லவ் ஜிஹாத்’ சட்டத்தினை வெற்றிபெற செய்வது என்ற குறுக்கு வழியை பாஜக பயன்படுத்துகிறது.” என்றார்.
இந்து பெண்களை கவர்ந்து அவர்களை திருமணம் செய்து மதமாற்றம் செய்ய சர்வதேச அளவில் நிதி உதவி செய்யப்படுகிறது என்று லவ் ஜிஹாத் சட்டத்தினை நியாயப்படுத்த குஜராத் மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா கூறுவது ஆச்சர்யமாக உள்ளதாக இர்ஷாத் லீல்கர் கூறினார். மேலும் ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரால் எப்படி ஆதாரமற்ற முழுமையாக அலங்கரிக்கப்பட்ட பொய்யை பரப்ப முடிகிறது? மக்களிடையே இவ்வாறானதொரு அவநம்பிக்கையையும், குரோதத்தையும் ஒரு அமைச்சரால் எப்படி பரப்ப முடிகிறது? என்று இர்ஷாத் லீல்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
லவ் ஜிஹாத் சட்டம் என்று சொல்லப்படும் மத சுதந்திர திருத்த சட்டம் தனியொரு குடிமகனுக்கு இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள உரிமையை மறுப்பதாகும். இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீதான நேரடி தாக்குதலாகும். இது பாஜக தனது வாக்கு அரசியலுக்காக மக்களை மத அடிப்படையில் பிரித்தாளும் தந்திரமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.