கொரோனா பரவல் தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா பரவல் தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி,

கடந்த 5-ந் தேதி பல்வேறு துறைகளை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக மாநில முதல்மந்திரிகளுடன் கடந்த 8-ந் தேதி ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது மாநிலங்களின் கொரோனா நிலவரம், எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைள் மற்றும் தடுப்பூசி திட்டப்பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அத்துடன் தொற்றை வீரியமாக தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

இவ்வாறு கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசும், பிரதமர் மோடியும் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், இது குறித்து முதல் முறையாக மாநில கவர்னர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், பிரதமர் மோடியும் இணைந்து இன்று மாநில கவர்னர்களுடன் ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மெய்நிகர் முறையில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக தொற்றை வேரறுக்க மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இந்த கூட்டத்தில் அது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

 

Translate »
error: Content is protected !!