கொரோனா 3வது அலையால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை – எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

கடந்த ஆண்டு களேபரத்தை உருவாக்கிய கொரோனா வைரஸ் முதல் அலையில் வயது முதிர்ந்தவர்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளானார்கள்.

தற்போது வந்துள்ள 2-வது அலையில் 25 வயது முதல் 40 வயது உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. அடுத்து வரும் 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக உலகளவில் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தகவல் குறித்து எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்த போது கூறியதாவது:–

கொரோனா 3வது அலையில் குழந்தைகள் கடுமையாகவோ அல்லது அதிகமாகவோ பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு அறிவியல் ரீதியான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இதுவரை இல்லை. அடுத்துவரும் 3வது அலையில் அதிகமானவர்கள் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள முழு ஊரடங்கு சூழ்நிலையால் குழந்தைகளின் கல்வி முற்றிலுமாக தடை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து செல்போன்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு மனஅழுத்தம், மனரீதியான சிக்கல்கள் அதிகரித்துள்ளன.

கொரோனா 1வது மற்றும் 2வது அலையில் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் ஒன்று போலத்தான் இருக்கிறது, குழந்தைகள் பெருமளவு பாதுக்காக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு லேசான அறிகுறிகளுடன் மீண்டுள்ளனர். ஆதலால், குழந்தைகளை பாதிக்கும் விஷயத்தில் வைரஸ் மாற்றம் அடையவில்லை என்பதால், மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரங்களும், அறிகுறியும் இதுவரை இல்லை.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்ற பயம் இருந்தாலும் இப்போதுவரை குழந்தைகள் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டது மிகக்குறைவுதான். 3வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்ற வாதத்தை முன்வைத்தாலும், அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. குழந்தைகள் கடுமையாக 3-வது அலையில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு அறிவியல் சான்றும் இல்லை.

இவ்வாறு ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!