சென்னை,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பேசிய விஷயம் ஒன்று அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்கும் முன் 4 வருடத்திற்கு முன் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்து தர்ம யுத்தம் நடத்தினார்.
இந்த தர்ம யுத்தமே சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கு எதிராக செய்யப்பட்டதாகவே பார்க்கப்பட்டது. அதன்பின் 4 வருடம் சிறை தண்டனைக்கு பின் சசிகலா சிறையில் இருந்து திரும்பி வந்துள்ளார். ஆனால் இப்போதும் கூட அதிமுக தரப்பு சசிகலாவை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளவில்லை. சசிகலாவும் அதிமுகவிற்கு தொந்தரவு எதுவும் செய்யாமல் மொத்தமாக அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார். தற்போது தமிழக அரசியலில் சசிகலா பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவது போல தெரியவில்லை.
முடிந்த வரை தேர்தல் முடியும் வரையிலாவது அமைதியாக இருப்போம் என்று சசிகலா ஒதுங்கி இருக்கிறார். நிலைமை இப்படி இருக்க தற்போது திடீரென சசிகலா பக்கம் ஓ.பி.எஸ் காற்று வீச தொடங்கி உள்ளது. எந்த சசிகலாவை எதிர்த்து ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியதாக கூறப்பட்டதோ அதே சசிகலாவிற்கு ஆதரவாக தற்போது ஓ.பி.எஸ் பேசியுள்ளார். ஓ.பி.எஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் , சசிகலா மீது எனக்கு வருத்தம், கோபம் எல்லாம் இல்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சில சந்தேகங்கள் பொதுவெளியில் அவர் மீது இருந்தன. சசிகலாவிற்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதை எல்லாம் வெளியே கொண்டு வர வேண்டும் என்பதால்தான் நான் தர்ம யுத்தம் நடத்தினேன். சசிகலா தன்னை நிரபராதி என நிரூபித்தால் அவர் மீதிருந்த அவப்பெயர் விடுபடும் என்றுதான் சொன்னேன். சசிகலா மீது எனக்கு சந்தேகம் இல்லை.
மற்றவர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்று விரும்பினேன். 32 ஆண்டு காலம் அவர் ஜெயலலிதாவுடன் இருந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கானவர் சசிகலா. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று சசிகலா விரும்பினால் அது நல்லது. அவரின் இந்த ஆசை அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.
அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன், என்று ஓ.பி.எஸ் ஒரேயடியாக சசிகலாவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இத்தனை நாட்கள் ஓ.பி.எஸ் vs சசிகலா என்று களம் இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ஓ.பி.எஸ் சசிகலாவிற்கு ஆதரவாக பேசி உள்ளார். அரசியலை விட்டே விலகுவதாக சசிகலா கூறியுள்ள போது திடீரென ஓ.பி.எஸ் ஏன் அவருக்கு ஆதரவாக பேசுகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் முடிவிற்கு பின் அதிமுகவில் சசிகலாதான் மீண்டும் தலை எடுப்பார் என்று ஏற்கனவே அரசியல் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால் மீண்டும் சசிகலாவிற்கு பவர் கிடைக்கும் என்றெல்லாம் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. இப்படி இருக்கும் போது ரிசல்ட் வரும் முன்பே சசிகலாவிற்கு ஓ.பி.எஸ் சிக்னல் கொடுக்க தொடங்கி உள்ளார். அதிமுக தோல்வி அடைந்தால் ஒருவேளை மீண்டும் சசிகலாவை கட்சிக்குள் ஏற்றுக்கொள்ளுமோ என்ற சந்தேகம் இதனால் எழுந்துள்ளது.
சசிகலாவிற்கு இப்போதே அனுப்பி வைக்கப்படும் சமாதான தூதாக இது பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவை பொறுத்து என்ன வேண்டுமானாலும் இனி நடக்கலாம். ஓ.பி.எஸ் இப்படி பேசுவார் என்று அதிமுகவிலேயே பலர் நினைத்து இருக்க மாட்டார்கள். சசிகலாவும் இதுவரை ஓ.பி.எஸ் குறித்தோ அல்லது வேறு அதிமுக தலைவர்கள் குறித்தோ தவறாக பேசவில்லை. இதனால் சசிகலாவும் அதிமுக மீது பெரிய அதிருப்பதியில் இல்லை.. மீண்டும் ஒன்றாக சேர்ந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக தெரிகிறது.. தேர்தலுக்கு பின் அதிமுகவில் என்னவெல்லாம் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்..!